திங்கள், 25 மே, 2009

பத்துமலையில் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் மலேசியர்கள்


ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் உலகப் புகழ் பெற்ற பத்துமலையில் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் மலேசியர்கள் கூடி இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, விதவையாக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, பசியால், வலியால் துடிதுடித்து அல்லல்படும் சிறிலங்கா தமிழ் இனத்திற்கு ஆதரவு போர் முழக்கம் செய்தனர் தமிழ் மலேசியர்கள். > இன்று காலை மணி 10.30 லிருந்து நண்பகல் மணி 1.30 வரையில் பத்துமலையில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட தமிழ் மலேசியர்கள் கூடி சிற்லங்கா தமிழர்களுக்காக பிராத்னை செய்தனர், ஆதரவு தெரிவித்தனர், தொடர்ந்து போராடுவோம் என்று போர் முழக்கம் செய்தனர். பத்து மலை ஆதரவு பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் வானொலி மற்றும் தொலக்காட்சி மூலம் அறிவிப்பு செய்திருந்தனர். எதிர்பார்த்ததைவிட குறைவான மக்கள் திரண்டதற்கு இந்த பயமுறுத்தல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், மக்களை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. இப்பேரணி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்ததாகும்.
ஏராளமான பெண்களும் இளைஞர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். பத்து மலை கோயில் வளாகத்தில் பேரணி நடந்த இடம் விழாக்கோலம் பூண்டிருந்தது என்று கூறலாம். எங்கு பார்த்தாலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோன்றும் பதாகைகளும் படங்களும் காணப்பட்டன. புலிக் கொடிகள் ஏராளமாக இருந்தன. மேடையில் புலிக் கொடிகள் ஏந்திய இளைஞர்கள் மேடையிலிருந்து உரையாற்றியவர்களுக்குப்பின் வரிசையாக நின்ற காட்சி வீர உணார்வை தூண்டிவிடுவதாக இருந்தது.
எங்கு பார்த்தாலும், பிரபாகரணின் புகழ் பாடும் பதாதைகள் இருந்தன. சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளை வன்மையாக கண்டிக்கும் பதாகைகளும் அட்டைகளும் இருந்தன. அவற்றோடு மகிந்தா ராஜபக்சே, கருணா மற்றும் கருணாநிதி ஆகியோரைத் தூற்றும் அட்டைகளை ஏராளமானோர் ஏந்தி நின்றனர். “இன்று ஒரு முக்கியமான நாள். கடந்த சில நாள்களில் மட்டும் 25,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கப் படையினரால் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் இன்று அஞ்சலி செலுத்துகிறோம்”, என்று உலகத் தமிழர் நிவாரண வாரியத்தின் ஒருங்கிணப்பாளர் சி. பசுபதி பேரணியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில் கூறினார். பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் 300,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “எவ்வளவு துன்பங்களுக்கு ஆளானாலும் அவர்கள் தங்களுடைய தமிழ் உணர்வை மறக்கமாட்டார்கள்”, என்றார். “”விவரிக்க இயலாத அளவிற்கு அல்லல்படும் தமிழர்களுக்கு நமது ஆதரவு தொடரும்”, என்றார் அவர். மலேசியர்கள் அனைவரும் சிறிலங்கா தமிழர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இனப்படுகொலை உள்நாட்டு விவகாரம்!
மிகப் பெரும் இனப்படுகொலை புரிந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம் உலக மக்களின் கண்டனத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறது. சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றை அந்நாடு ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள 12 நாடுகளில் மலேசியாவும் அடங்கியுள்ளது. “மலேசியாவின் ஆதரவை கண்டிக்கிறோம். மலேசியா அதன் ஆதரவைத் திரும்பப்பெற வேண்டும்” என்று பசுபதி கூறியபோது கூட்டனத்தினர் “திரும்பப்பெற வேண்டும்” என்று முழக்கமிட்டனர். மஇகாவின் தலைவர் ச. சாமிவேலு சிறலங்கா அரசின் தீர்மானத்திற்கு மலேசியா வழங்கியுள்ள ஆதரவைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பசுபதி நன்றி கூறினார். சிறிலங்காவின் தப்பிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் தூதரகங்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என்று பசுபதி மேலும் கூறினார். பேரணியைத் தடுக்கும் முயற்சி சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க பத்துமலை கோயில் வளாகத்தில் பேரணி நடப்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாக கோயில் நிருவாகத்தின் தலைவர் நடராஜா அவருடைய உரையில் கூறினார். “இப்பேரணிக்கு இடம் கொடுக்கக் கூடாது, இதை நிறுத்த வேண்டும் என்று எனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், நான் மறுத்து விட்டேன்”, என்று நடராஜா கூறினார். கூடியிருந்த மக்கள் அவரைப் பாராட்டும் வகையில் குரல் எழுப்பினர். இந்தியப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் சிறிலங்காவில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான மிகப் பெரும் பொறுப்பு சீனாவையும் ரஷ்யாவையும் சாறும் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் கூறினார். “சீனாவும் ரஷ்யாவும் அந்நிய நாடுகள். நமது உறவு நாடான இந்தியா துரோகம் செய்து விட்டது; தமிழகம் துரோகம் செய்து விட்டது. இது மன்னிக்க முடியாத குற்றம்”, என்றாரவர். “இந்தியா இழைத்த துரோகத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்; தமிழ் இனப்படுகொலை சாத்தியமாயிற்று”, என்று அவர் மேலும் கூறினார். இந்தியா தண்டிக்கப்பட வேண்டும். இந்தியப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்றாரவர். “நம் நாட்டிலும் துரோகிகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.” இனப்படுகொலை புரிந்து விட்டு தப்பித்துக்கொள்ள நினைக்கும் சிறிலங்காவிற்கு மலேசியா ஆதரவு வழங்கக்கூடாது. “நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்புவோம்”, என்று மனோகரன் மேலும் கூறினார். “இன்று நடக்கும் இந்த பத்துமலை பேரணியை 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள்”, என்று அவர் தெரிவித்தார். சிறிலங்கா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை

எதிரும் புதிருமாக இருக்கும் இந்திய மலேசியர்கள் இன்று பத்துமலையில் சிறிலங்கா தமிழர்களுக்காக ஒன்றிணைந்து கூடியிருப்பதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார் துணை அமைச்சர் எம். சரவணன். “நாம் நிச்சயமாக சிறிலங்கா தமிழர்களுக்கு உதவுவோம். கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று தாங்கொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவுவோம்”, என்று மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கிடையில் அவர் கூறினார். “ஐநாவில் சிறிலங்கா தாக்கல் செய்திருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை”, என்று துணை அமைச்சர் திட்டவட்டமாக கூறினார். தமிழ் ஈழம் வரும், வந்தே தீரும். “அண்ணா பிரபாகரா” “அண்ணா பிரபாகரா”, “அண்ணா பிரபாகரா” என்று மிக ஆழ்ந்த உணர்வுடன் உரையாற்றிய மஇகாவின் இளைஞர் பிரிவு உறுப்பினர் குமார் அம்மன் அங்கு குழுமியிருந்தவர்களை உலுக்கிவிட்டார். பத்துமலைத் தீர்மானங்கள் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பத்துமலை பேரணியில் சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும், போர்க் குற்ற விசாரணை மன்றம் அமைக்கக் கோரியும் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், அத்தீர்மானங்கள் அனைத்திற்கும் விளக்கம் அளித்து உரையாற்றினார் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன்

வெள்ளி, 15 மே, 2009




சிறிலங்காவில் தொடரும் கொடூரத் தமிழ் இனப்படுகொலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300 க்கு மேற்பட்ட தமிழ் மலேசியர்கள் இன்று சிறிலங்கா தூதரகத்தின்முன் உணர்ச்சிமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அமைதியாகத் தொடங்கிய எதிர்ப்பு கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் கொடும்பாவி அடங்கிய சவப் பெட்டி கொண்டுவரப்பட்டதும் எதிர்ப்பு உணர்வு பொங்கி எழுந்தது.

காலை மணி 11.00 முதல் மக்கள் கூடத்தொடங்கினர். அவர்களுக்குமுன் போலீசாரும் கலகத்தடுப்பு படையினரும் அங்கு இருந்தனர்.

நண்பகல் மணி 12 க்குள் ஆர்ப்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோகங்களும் முழங்கத் தொடங்கின.

“தமிழனைக் கொல்லாதே”, “ராஜபக்சே ஒழிக”, “மன்மோகன் சிங் ஒழிக”, “சோனியா காந்தி ஒழிக” என்ற முழக்கங்கள் மிக ஆக்ரோசமாக முழங்கப்பட்டன. இக்கண்டன முழக்கங்களுக்கு வலுவூட்டி முன்நின்று வழிநடத்தியதில் முக்கியப் பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்.

“ராஜபக்சே போர்க் குற்றங்களுக்காக அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்”, என்றார் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா.

“பாதுகாப்பு வளையங்கள் என்று பெயரளவில் கூறப்படும் இடங்கள் பாதுகாப்பான இடங்களே அல்ல, ஏனென்றால் அவ்விடங்களில் பயங்கரமான குண்டுவீச்சுகள் நடத்தப்படுகின்றன. உலகம் அதைக்கண்டுள்ளது. அதனால்தான் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கூறப்பட்டது.”

“இது ஒரு சட்டப்பூர்வமான போர் அல்ல. கனரக ஆயுதங்களை உபயோகிக்க முடியாது. அப்பாவி பொது மக்களை கொன்றுவிட்டு, இது போர் என்று கூறுகிறார்கள்.”

“இது கொலை, இது போர் குற்றம். ராஜபக்சேயை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றம் சாட்ட வேண்டும். போர்க் குற்றங்கள் புரிந்ததில் அவர்களுக்கு பங்குண்டு என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் உண்டு”, என்று சிவராசா மேலும் கூறினார்.

இப்போராட்டங்களால் கிடைக்கப்போகும் பலன் என்ன என்று வினவையபோது, “இது நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பும் அறிவிப்பாகும். மலேசிய அரசாங்கம் மௌனமாக இருந்தபோதிலும், பக்கத்தான் மௌனமாக இருக்காது”, என்றார்.

“இந்த அக்கிரமங்களை, கொலைகளை நிறுத்துமாறு நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.

“ஒவ்வொரு எதிர்ப்பின் அளவை அது ஏற்படுத்தும் தாக்கத்தைக்கொண்டு அளவிட முடியாது. நாம் என்ன செய்ய முடியுமோ, நாம் எதைச் செய்வதற்கு கடப்பாடு கொண்டுள்ளோமோ, அதனை நாம் இன்று செய்கிறோம்: அதுதான் எதிர்ப்பு. அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது, நாம் அமைதியாக இருக்க முடியாது.”

“இது எங்களுடைய எதிர்ப்பு, அவர்கள் எங்களுடைய எதிர்ப்பை கேட்க வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். நாங்கள் நிறுத்தப்போவதில்லை. கொலைகள் நிறுத்தப்படும் வரையில் நாங்கள் நிறுத்தப்போவதில்லை”, என்று சிவராசா வலியுறுத்தினார்.

உரிமை நமக்கு உண்டு

“சிறிலங்கா அரசாங்கம் உலக மக்களின் ஆட்சேபங்களையும் உலக நாடுகளின் வேண்டுகோள்களையும் அடியோடு புறக்கணித்துவிட்டு தமிழ் இன மக்களை, அந்நாட்டின் குடிமக்களை, கொடூரமாக கனரக ஆயுதங்களைக்கொண்டு அன்றாடம் கொன்றுகுவித்து வருகிறது. இக்கொடுமையைக் கண்டிக்கும் போரை நிறுத்தக் கோரும் உரிமை நமக்கு உண்டு”, என்று எஸ். பசுபதி கூறினார்.

“குண்டுவீச்சால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கானவர்களைப்போல் பட்டினியாலும் வியாதியாலும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தமிழ் இனத்தை வேரோடு அழிப்பதற்காக சிங்கள இனவெறி அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் இன ஒழிப்பு போர். இப்போரை முடிவிற்கு கொண்டுவர நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். பல நாடுகளில் சிறிலங்காவில் நடக்கும் போருக்கு எதிராக பலமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன் விளைவாக உலக நாடுகளில் பல சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கத் துவங்கி விட்டன. நாம் நமது போராட்டத்தைத் தொடர வேண்டும்”, என்று பசுபதி மேலும் கூறினார்.

வழக்குரைஞர் கே.எ. ராமு தாம் மனித உரிமையில் ஈடுபடுடைய ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் இலங்கையில் தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக கூறினார்.

ராஜபக்சே தகனம் செய்யப்பட்டார்

செய்தியாளர்களுடனான கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று எழும்பிய சத்தத்தால் கவனம் கூட்டத்தினரின் பக்கம் திரும்பிய போது, பலர் தங்களுடைய தலைகளுக்குமேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சவப் பெட்டியுடன் முழக்கமிட்டவாறு தூதரகத்தின் வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

ஒரு கணம் அசந்துபோன போலீசார் விழித்துக்கொண்டு கலகத்தடுப்பு படையினரை அழைத்து சவப் பெட்டி கொண்டுவரப்படுவதைத் தடுக்க முயற்சித்தனர்.

அப்போது போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரகளும் கைகலக்கும் சூழ்நிலை ஏற்படவிருந்தது. போலீசார் அவர்களின் தடிகளைக்கொண்டு கூட்டத்தினரை திருப்பித்தள்ள முயன்றனர். அப்போது சவப் பெட்டி கீழே விழுந்து உடைந்தது.

அச்சவப் பெட்டியில் ராஜபக்சேயின் கொடும்பாவி வைக்கப்பட்டிருந்தது. கீழே விழுந்த பெட்டிக்கும் ராஜபக்சே கொடும்பாவிக்கும் தீ மூட்டுவதில் ஆர்பாட்டக்காரர்கள் வெற்றி பெற்றனர். சாலையின் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட எரிந்து கொண்டிருக்கும் சவப் பெட்டியும் ராஜபக்சேயும் முற்றாக எரிந்து சாம்பலாயின.

இக்கட்டத்தில், போலீஸ் அதிகாரி கூட்டத்தினரை உடனே கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

அசம்பாவம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்சே தகனம் செய்யப்பட்ட மகிழ்சியோடு கலைந்து சென்றனர்.

ஞாயிறு, 10 மே, 2009

உதயாவுக்கு வீர வரவேற்பு














கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.

அவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும். கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.

இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.
பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார். உதயகுமாரின் உடனடியானத் திட்டங்கள் என்ன என்று வினவப்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிக்கப்போவதாக கூறினார்.

“தலைமையத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தபோதிலும் அம்னோவும் பாரிசானும் மாறவில்லை என்று நான் கருதுகிறேன்”, என்றாரவர்.

“நாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதால் அதிகமான மக்கள் ஆதரவு வழங்குகிறார்கள். இந்தியச் சமூகத்திற்கு நற்பலன்களை பெறுவதற்கான தளம் இருப்பதாக நான் கருதுகிறேன்”, அவர் மேலும் கூறினார்.

எவ்வளவு இன்னல்கள் வந்த போதிலும் தன்னுடைய போராட்டம் தொடரும்; அதைத் தடுப்பதற்கு அதிகாரவர்க்கத்தை அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் உறுதியளித்தார்.

வெள்ளி, 8 மே, 2009

மூன்று இண்ட்ராப் தலைவர்கள் விடுவிக்கப்படுவர்

இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள் உட்பட 13 தடுப்புக்காவல் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கும். இதனை இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். அவர்கள் அடுத்த “இரண்டு அல்லது மூன்று நாள்களில்” விடுவிக்கப்படுவர் என்று அவர் கூறினார். “நான் அவர்கள் விடுவிக்கப்படுவது சம்பந்தப்பட்ட பத்திரங்களில் விரைவில் கையெழுத்திடுவேன்”, என்றாரவர். 13 இசா கைதிகளும் விடுவிக்கப்படுவதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. ஆனால், அவர்கள் “இனிமேலும் தடுத்துவைத்திருப்பதற்கான தேவை இல்லை”, என்று மேலும் கூறினார்.
விடுவிக்கப்படவிருக்கும் 13 பேர்களில், அறுவர் மலேசியர்கள், இருவர் இந்தோனேசியர்கள், மீதமுள்ள ஐவரும் பிலிப்பினோக்கள். ஜுல்கெப்லி மார்ஜுகி, ஜெக்னால் அடில், அஸ்மி பிண்டாதுன், பி. உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், ஜைநுன் ரஷிட், அபவுட் கபார் இஸ்மாயில், சுபியன் சாலே, ஹஷிம் தாலிப், அப்துல் ஜமால் அஸகாரி, ஜமால் முகமட் சலாம் மற்றும் ஹுசின் அலி ஆகியோரே விடுவிக்கப்படவிருக்கும் 13 இசா கைதிகள். இன்னும் தடுப்புக்காவில் இருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள்: பி. உதயகுமார், டி. வசந்தகுமார் மற்றும் எம். மனோகரன். மனோகரன் கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினராவர். கடந்த பொதுத்தேர்தலில் தடுப்புக்காவல் கைதியாக இருந்துகொண்டே வெற்றி பெற்றார். பல்லாயிரக்கணக்கான இந்திய மலேசியர்கள் தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டததைத் தொடர்ந்து டிசம்பர் 2007 இந்த ஐந்து இண்ட்ராப் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.