சிறிலங்காவில் தொடரும் கொடூரத் தமிழ் இனப்படுகொலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300 க்கு மேற்பட்ட தமிழ் மலேசியர்கள் இன்று சிறிலங்கா தூதரகத்தின்முன் உணர்ச்சிமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அமைதியாகத் தொடங்கிய எதிர்ப்பு கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் கொடும்பாவி அடங்கிய சவப் பெட்டி கொண்டுவரப்பட்டதும் எதிர்ப்பு உணர்வு பொங்கி எழுந்தது.
காலை மணி 11.00 முதல் மக்கள் கூடத்தொடங்கினர். அவர்களுக்குமுன் போலீசாரும் கலகத்தடுப்பு படையினரும் அங்கு இருந்தனர்.
நண்பகல் மணி 12 க்குள் ஆர்ப்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோகங்களும் முழங்கத் தொடங்கின.
“தமிழனைக் கொல்லாதே”, “ராஜபக்சே ஒழிக”, “மன்மோகன் சிங் ஒழிக”, “சோனியா காந்தி ஒழிக” என்ற முழக்கங்கள் மிக ஆக்ரோசமாக முழங்கப்பட்டன. இக்கண்டன முழக்கங்களுக்கு வலுவூட்டி முன்நின்று வழிநடத்தியதில் முக்கியப் பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்.
“ராஜபக்சே போர்க் குற்றங்களுக்காக அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்”, என்றார் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா.
“பாதுகாப்பு வளையங்கள் என்று பெயரளவில் கூறப்படும் இடங்கள் பாதுகாப்பான இடங்களே அல்ல, ஏனென்றால் அவ்விடங்களில் பயங்கரமான குண்டுவீச்சுகள் நடத்தப்படுகின்றன. உலகம் அதைக்கண்டுள்ளது. அதனால்தான் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கூறப்பட்டது.”
“இது ஒரு சட்டப்பூர்வமான போர் அல்ல. கனரக ஆயுதங்களை உபயோகிக்க முடியாது. அப்பாவி பொது மக்களை கொன்றுவிட்டு, இது போர் என்று கூறுகிறார்கள்.”
“இது கொலை, இது போர் குற்றம். ராஜபக்சேயை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றம் சாட்ட வேண்டும். போர்க் குற்றங்கள் புரிந்ததில் அவர்களுக்கு பங்குண்டு என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் உண்டு”, என்று சிவராசா மேலும் கூறினார்.
இப்போராட்டங்களால் கிடைக்கப்போகும் பலன் என்ன என்று வினவையபோது, “இது நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பும் அறிவிப்பாகும். மலேசிய அரசாங்கம் மௌனமாக இருந்தபோதிலும், பக்கத்தான் மௌனமாக இருக்காது”, என்றார்.
“இந்த அக்கிரமங்களை, கொலைகளை நிறுத்துமாறு நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.
“ஒவ்வொரு எதிர்ப்பின் அளவை அது ஏற்படுத்தும் தாக்கத்தைக்கொண்டு அளவிட முடியாது. நாம் என்ன செய்ய முடியுமோ, நாம் எதைச் செய்வதற்கு கடப்பாடு கொண்டுள்ளோமோ, அதனை நாம் இன்று செய்கிறோம்: அதுதான் எதிர்ப்பு. அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது, நாம் அமைதியாக இருக்க முடியாது.”
“இது எங்களுடைய எதிர்ப்பு, அவர்கள் எங்களுடைய எதிர்ப்பை கேட்க வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். நாங்கள் நிறுத்தப்போவதில்லை. கொலைகள் நிறுத்தப்படும் வரையில் நாங்கள் நிறுத்தப்போவதில்லை”, என்று சிவராசா வலியுறுத்தினார்.
உரிமை நமக்கு உண்டு
“சிறிலங்கா அரசாங்கம் உலக மக்களின் ஆட்சேபங்களையும் உலக நாடுகளின் வேண்டுகோள்களையும் அடியோடு புறக்கணித்துவிட்டு தமிழ் இன மக்களை, அந்நாட்டின் குடிமக்களை, கொடூரமாக கனரக ஆயுதங்களைக்கொண்டு அன்றாடம் கொன்றுகுவித்து வருகிறது. இக்கொடுமையைக் கண்டிக்கும் போரை நிறுத்தக் கோரும் உரிமை நமக்கு உண்டு”, என்று எஸ். பசுபதி கூறினார்.
“குண்டுவீச்சால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கானவர்களைப்போல் பட்டினியாலும் வியாதியாலும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தமிழ் இனத்தை வேரோடு அழிப்பதற்காக சிங்கள இனவெறி அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் இன ஒழிப்பு போர். இப்போரை முடிவிற்கு கொண்டுவர நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். பல நாடுகளில் சிறிலங்காவில் நடக்கும் போருக்கு எதிராக பலமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன் விளைவாக உலக நாடுகளில் பல சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கத் துவங்கி விட்டன. நாம் நமது போராட்டத்தைத் தொடர வேண்டும்”, என்று பசுபதி மேலும் கூறினார்.
வழக்குரைஞர் கே.எ. ராமு தாம் மனித உரிமையில் ஈடுபடுடைய ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் இலங்கையில் தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக கூறினார்.
ராஜபக்சே தகனம் செய்யப்பட்டார்
செய்தியாளர்களுடனான கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று எழும்பிய சத்தத்தால் கவனம் கூட்டத்தினரின் பக்கம் திரும்பிய போது, பலர் தங்களுடைய தலைகளுக்குமேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சவப் பெட்டியுடன் முழக்கமிட்டவாறு தூதரகத்தின் வாயிலை நோக்கி நகர்ந்தனர்.
ஒரு கணம் அசந்துபோன போலீசார் விழித்துக்கொண்டு கலகத்தடுப்பு படையினரை அழைத்து சவப் பெட்டி கொண்டுவரப்படுவதைத் தடுக்க முயற்சித்தனர்.
அப்போது போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரகளும் கைகலக்கும் சூழ்நிலை ஏற்படவிருந்தது. போலீசார் அவர்களின் தடிகளைக்கொண்டு கூட்டத்தினரை திருப்பித்தள்ள முயன்றனர். அப்போது சவப் பெட்டி கீழே விழுந்து உடைந்தது.
அச்சவப் பெட்டியில் ராஜபக்சேயின் கொடும்பாவி வைக்கப்பட்டிருந்தது. கீழே விழுந்த பெட்டிக்கும் ராஜபக்சே கொடும்பாவிக்கும் தீ மூட்டுவதில் ஆர்பாட்டக்காரர்கள் வெற்றி பெற்றனர். சாலையின் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட எரிந்து கொண்டிருக்கும் சவப் பெட்டியும் ராஜபக்சேயும் முற்றாக எரிந்து சாம்பலாயின.
இக்கட்டத்தில், போலீஸ் அதிகாரி கூட்டத்தினரை உடனே கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.
அசம்பாவம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்சே தகனம் செய்யப்பட்ட மகிழ்சியோடு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக