திங்கள், 25 மே, 2009

பத்துமலையில் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் மலேசியர்கள்


ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் உலகப் புகழ் பெற்ற பத்துமலையில் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் மலேசியர்கள் கூடி இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, விதவையாக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, பசியால், வலியால் துடிதுடித்து அல்லல்படும் சிறிலங்கா தமிழ் இனத்திற்கு ஆதரவு போர் முழக்கம் செய்தனர் தமிழ் மலேசியர்கள். > இன்று காலை மணி 10.30 லிருந்து நண்பகல் மணி 1.30 வரையில் பத்துமலையில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட தமிழ் மலேசியர்கள் கூடி சிற்லங்கா தமிழர்களுக்காக பிராத்னை செய்தனர், ஆதரவு தெரிவித்தனர், தொடர்ந்து போராடுவோம் என்று போர் முழக்கம் செய்தனர். பத்து மலை ஆதரவு பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் வானொலி மற்றும் தொலக்காட்சி மூலம் அறிவிப்பு செய்திருந்தனர். எதிர்பார்த்ததைவிட குறைவான மக்கள் திரண்டதற்கு இந்த பயமுறுத்தல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், மக்களை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. இப்பேரணி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்ததாகும்.
ஏராளமான பெண்களும் இளைஞர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். பத்து மலை கோயில் வளாகத்தில் பேரணி நடந்த இடம் விழாக்கோலம் பூண்டிருந்தது என்று கூறலாம். எங்கு பார்த்தாலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோன்றும் பதாகைகளும் படங்களும் காணப்பட்டன. புலிக் கொடிகள் ஏராளமாக இருந்தன. மேடையில் புலிக் கொடிகள் ஏந்திய இளைஞர்கள் மேடையிலிருந்து உரையாற்றியவர்களுக்குப்பின் வரிசையாக நின்ற காட்சி வீர உணார்வை தூண்டிவிடுவதாக இருந்தது.
எங்கு பார்த்தாலும், பிரபாகரணின் புகழ் பாடும் பதாதைகள் இருந்தன. சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளை வன்மையாக கண்டிக்கும் பதாகைகளும் அட்டைகளும் இருந்தன. அவற்றோடு மகிந்தா ராஜபக்சே, கருணா மற்றும் கருணாநிதி ஆகியோரைத் தூற்றும் அட்டைகளை ஏராளமானோர் ஏந்தி நின்றனர். “இன்று ஒரு முக்கியமான நாள். கடந்த சில நாள்களில் மட்டும் 25,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கப் படையினரால் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் இன்று அஞ்சலி செலுத்துகிறோம்”, என்று உலகத் தமிழர் நிவாரண வாரியத்தின் ஒருங்கிணப்பாளர் சி. பசுபதி பேரணியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில் கூறினார். பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் 300,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “எவ்வளவு துன்பங்களுக்கு ஆளானாலும் அவர்கள் தங்களுடைய தமிழ் உணர்வை மறக்கமாட்டார்கள்”, என்றார். “”விவரிக்க இயலாத அளவிற்கு அல்லல்படும் தமிழர்களுக்கு நமது ஆதரவு தொடரும்”, என்றார் அவர். மலேசியர்கள் அனைவரும் சிறிலங்கா தமிழர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இனப்படுகொலை உள்நாட்டு விவகாரம்!
மிகப் பெரும் இனப்படுகொலை புரிந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம் உலக மக்களின் கண்டனத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறது. சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றை அந்நாடு ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள 12 நாடுகளில் மலேசியாவும் அடங்கியுள்ளது. “மலேசியாவின் ஆதரவை கண்டிக்கிறோம். மலேசியா அதன் ஆதரவைத் திரும்பப்பெற வேண்டும்” என்று பசுபதி கூறியபோது கூட்டனத்தினர் “திரும்பப்பெற வேண்டும்” என்று முழக்கமிட்டனர். மஇகாவின் தலைவர் ச. சாமிவேலு சிறலங்கா அரசின் தீர்மானத்திற்கு மலேசியா வழங்கியுள்ள ஆதரவைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பசுபதி நன்றி கூறினார். சிறிலங்காவின் தப்பிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் தூதரகங்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என்று பசுபதி மேலும் கூறினார். பேரணியைத் தடுக்கும் முயற்சி சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க பத்துமலை கோயில் வளாகத்தில் பேரணி நடப்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாக கோயில் நிருவாகத்தின் தலைவர் நடராஜா அவருடைய உரையில் கூறினார். “இப்பேரணிக்கு இடம் கொடுக்கக் கூடாது, இதை நிறுத்த வேண்டும் என்று எனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், நான் மறுத்து விட்டேன்”, என்று நடராஜா கூறினார். கூடியிருந்த மக்கள் அவரைப் பாராட்டும் வகையில் குரல் எழுப்பினர். இந்தியப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் சிறிலங்காவில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான மிகப் பெரும் பொறுப்பு சீனாவையும் ரஷ்யாவையும் சாறும் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் கூறினார். “சீனாவும் ரஷ்யாவும் அந்நிய நாடுகள். நமது உறவு நாடான இந்தியா துரோகம் செய்து விட்டது; தமிழகம் துரோகம் செய்து விட்டது. இது மன்னிக்க முடியாத குற்றம்”, என்றாரவர். “இந்தியா இழைத்த துரோகத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்; தமிழ் இனப்படுகொலை சாத்தியமாயிற்று”, என்று அவர் மேலும் கூறினார். இந்தியா தண்டிக்கப்பட வேண்டும். இந்தியப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்றாரவர். “நம் நாட்டிலும் துரோகிகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.” இனப்படுகொலை புரிந்து விட்டு தப்பித்துக்கொள்ள நினைக்கும் சிறிலங்காவிற்கு மலேசியா ஆதரவு வழங்கக்கூடாது. “நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்புவோம்”, என்று மனோகரன் மேலும் கூறினார். “இன்று நடக்கும் இந்த பத்துமலை பேரணியை 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள்”, என்று அவர் தெரிவித்தார். சிறிலங்கா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை

எதிரும் புதிருமாக இருக்கும் இந்திய மலேசியர்கள் இன்று பத்துமலையில் சிறிலங்கா தமிழர்களுக்காக ஒன்றிணைந்து கூடியிருப்பதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார் துணை அமைச்சர் எம். சரவணன். “நாம் நிச்சயமாக சிறிலங்கா தமிழர்களுக்கு உதவுவோம். கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று தாங்கொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவுவோம்”, என்று மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கிடையில் அவர் கூறினார். “ஐநாவில் சிறிலங்கா தாக்கல் செய்திருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை”, என்று துணை அமைச்சர் திட்டவட்டமாக கூறினார். தமிழ் ஈழம் வரும், வந்தே தீரும். “அண்ணா பிரபாகரா” “அண்ணா பிரபாகரா”, “அண்ணா பிரபாகரா” என்று மிக ஆழ்ந்த உணர்வுடன் உரையாற்றிய மஇகாவின் இளைஞர் பிரிவு உறுப்பினர் குமார் அம்மன் அங்கு குழுமியிருந்தவர்களை உலுக்கிவிட்டார். பத்துமலைத் தீர்மானங்கள் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பத்துமலை பேரணியில் சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும், போர்க் குற்ற விசாரணை மன்றம் அமைக்கக் கோரியும் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், அத்தீர்மானங்கள் அனைத்திற்கும் விளக்கம் அளித்து உரையாற்றினார் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக