ஞாயிறு, 10 மே, 2009

உதயாவுக்கு வீர வரவேற்பு














கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.

அவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும். கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.

இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.
பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார். உதயகுமாரின் உடனடியானத் திட்டங்கள் என்ன என்று வினவப்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிக்கப்போவதாக கூறினார்.

“தலைமையத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தபோதிலும் அம்னோவும் பாரிசானும் மாறவில்லை என்று நான் கருதுகிறேன்”, என்றாரவர்.

“நாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதால் அதிகமான மக்கள் ஆதரவு வழங்குகிறார்கள். இந்தியச் சமூகத்திற்கு நற்பலன்களை பெறுவதற்கான தளம் இருப்பதாக நான் கருதுகிறேன்”, அவர் மேலும் கூறினார்.

எவ்வளவு இன்னல்கள் வந்த போதிலும் தன்னுடைய போராட்டம் தொடரும்; அதைத் தடுப்பதற்கு அதிகாரவர்க்கத்தை அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக